சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 269வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
தீரன் சின்னமலை பிறந்தநாளை ஒட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, தளராத மன உறுதியுடன் சுதந்திர இந்தியாவிற்கான அடித்தளத்தை தீரன் சின்னமலை அமைத்ததாக புகழாரம் சூட்டினார். தீரன் சின்னமலையின் தொலைநோக்குப் பார்வை தலைமுறைகளை தொடர்ந்து ஊக்குவிக்கிறது எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முதலமைச்சர் ஸ்டாலின், சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் இணைந்து அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர்.
இதை தொடர்ந்து தீரன் சின்னமலை சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்களும் இணைந்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.