கொடுங்கையூர், மணலி சின்ன மாத்தூர் ஆகிய இடங்களில் அனுமதியில்லாமல் குப்பைகளை எரிக்கும் எந்திரத்தை அமைத்தது எப்படி என சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் கொடுங்கையூர், மணலி சின்னமாத்தூர் பகுதிகளில் குப்பைகளை எரிக்கும் எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த எந்திரத்தில் இருந்து வெளியேறும் புகையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
அப்போது, அரசே விதியை மீறினால் பொதுமக்கள் எப்படி விதிகளை பின்பற்றுவார்கள் எனவும், அனுமதியில்லாமல் குப்பைகளை எரிக்கும் எந்திரத்தை அமைத்தது எப்படி? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும், இது தொடர்பாக பதிலளிக்கும்படி, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.