மத்தூர் அருகே காரும், ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள காமாட்சிபட்டி பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் தாய், மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் திருச்செந்தூருக்கு சுற்றுலா சென்றார்.
திருச்செந்தூரில் இருந்து பெங்களூரு வழியாகச் சொந்த ஊருக்கு வந்தபோது கண்ணன்டஹள்ளி பகுதியில் எதிரே வந்த ஈச்சர் லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், கோபிநாத்தின் தாய் உமாராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்த கோபிநாத்தை பொதுமக்களின் உதவியுடன் மீட்டனர்.
ஜேசிபி வாகனம் மற்றும் கடப்பாரை உதவியுடன் மீட்கப்பட்ட கோபிநாத்தை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தில் லேசான காயமடைந்த கோபிநாத்தின் மனைவி மற்றும் குழந்தைகள் மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.