இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கிய விவகாரம் தொடர்பாக காவல்நிலையத்தில் விசாரணைக்கு வந்ததை, ரீல்ஸ் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட இளைஞர்களின் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சேலம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் மூன்று பேர் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கி செல்வதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், திருப்பூரைச் சேர்ந்த சஞ்சய், டிக்ஸன், தமிழ் நாதன் ஆகியோரை கருமத்தம்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மூன்று பேரின் முகவரியைப் பெற்றுக்கொண்ட போலீசார், அவர்களுக்கு அபராதம் விதித்ததுடன் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்நிலையில், காவல் நிலையத்திற்கு வந்து சென்றதை இளைஞர்கள் ரீல்ஸ் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கருமத்தம்பட்டி போலீசார், மீண்டும் 3 இளைஞர்களையும் காவல் நிலையம் வரவழைத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இளைஞர்களின் 3 இருசக்கர வானங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து பெற்றோர் வருத்தம் தெரிவித்தால் 3 பேரையும் ஜாமினில் விடுவித்த போலீசார், 3 இளைஞர்கள் மன்னிப்பு கேட்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.