வக்ஃப் சட்டத் திருத்தத்தை இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று கூறிவந்த நிலையில், அச்சட்டம், இந்தியாவில் அமலுக்கு வந்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஒரு மாவட்டத்தைத் தவிர நாடெங்கும் வக்ஃப் திருத்தச் சட்டத்தை மக்கள் வரவேற்றுள்ளனர். சர்ச்சைக்குரிய சட்டம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் முத்திரை குத்தப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்தம் ஏன் முக்கியமானது ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நூற்றுக்கணக்கான முஸ்லிம் விதவைகளின் கடிதங்களே வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகத்தைச் சீர்திருத்தும் பணியை மேற்கொள்ள வழிவகுத்தன என்று கூறியுள்ள பிரதமர் மோடி, வக்ஃப் சொத்துக்கள் முறையாக நிர்வகிக்கப் பட்டிருந்தால், முஸ்லிம் இளைஞர்கள் சைக்கிள் பஞ்சர் போடும் வேலைக்குச் சென்றிருக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
வக்ஃப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை என்றும், ஆனால், அந்த சொத்துக்கள் ஊழல் அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கப்படுகிறது என்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டி இருந்தார்.
பெரும்பாலான இஸ்லாமிய மக்களால் வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், வக்ஃப் சட்டத் திருத்தத்தில் கிட்டத்தட்ட 40 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த சட்டத் திருத்தம் வந்தால், CAA குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் NRC தேசிய குடியுரிமைப் பதிவேட்டைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை போராட்டங்களைப் போல், இதற்கும் நாடெங்கும் முஸ்லிம்களின் போராட்டங்கள் நடக்கும் என்று எதிர்க்கட்சியினர் எச்சரித்திருந்தனர்.
ஆனால், மேற்கு வங்கத்தின் ஒரு எல்லையோர மாவட்டத்தில் நடந்த வன்முறை போராட்டம் மற்றும் தென் மாநிலங்களில் நடந்த சில போராட்டங்களைத் தவிர வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்கள் போராட வில்லை என்பதே உண்மை.
NRC மற்றும் CAA விஷயத்தில் தனது உரிமைக்கே ஆபத்து போல என்று பயந்து வீதிக்கு வந்து போராடினார்கள். ஆனால், தனிப்பட்ட உரிமைகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை, மாறாக,தங்கள் உரிமைகள் காப்பாற்றப்படுகிறது என்பதால், இந்த சட்டத்தை எதிர்க்க இஸ்லாமியரே தயாராக இல்லை.
வக்ஃப் வாரியம் எந்தவொரு சொத்தையும் சரிபார்க்காமல் உரிமை கோர முடியும் என்பது உட்படச் சொத்துக்கள், நிலங்கள் மீது இருக்கும் தன்னிச்சையான அதிகாரங்கள் புதிய சட்டத்தில் முற்றிலுமாக நீக்கப் பட்டுள்ளன. மேலும், வக்ஃப் வாரியத்தின் சொத்து குறித்த சர்ச்சைகளில் இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறது.
இந்நிலையில், கடந்த வாரம், வேலூரில் காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த சுமார் 150 குடும்பங்களின் நிலங்களை வக்ஃப் சொத்து என்று அறிவிக்கப் பட்டுள்ளது. நான்கு தலைமுறைகளாக இக்கிராமத்தில் வசித்து வருவதாகவும்,,நிலத்துக்கான உரிய ஆவணங்கள் வைத்திருப்பதாகவும், அரசுக்கு நில வரி செலுத்துவதாகவும் கூறுகின்றனர். இந்த பிரச்சனை தொடர்பாகக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் சென்று முறையிட்டுள்ளனர்.
இதே போல் ஏற்கெனவே, 1500 ஆண்டுகள் பழமையான சோழர் கால கோவிலுக்குச் சொந்தமான நிலம் உட்பட 480 ஏக்கர் நிலத்தை வக்ஃப் சொத்து என்று கூறிய போது, திருச்செந்துறை கிராமம் அதிர்ச்சி அடைந்தது.
இந்த இரண்டு கிராமங்களிலும், முஸ்லிம்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், வக்ஃப் வாரியங்கள் யாரையும் விட்டு வைப்பதில்லை என்று தெரிய வருகிறது. இந்த சூழலில் தான், வக்ஃப் சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக பெரும் போராட்டங்கள் இல்லாதது, முஸ்லிம்கள் இந்த சட்டத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
வக்ஃப் சட்டத் திருத்தம் – இது முஸ்லிம்களுக்கு எதிரான சட்டம் அல்ல. இது நீதிக்கான சட்டமாகும். வக்ஃப்பை வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்றும் சட்டம் என்று கூறப்பட்டுள்ளது. வக்ஃப் சொத்துக்களைப் பாதுகாக்க,முறையாக நிர்வகிக்க, அபகரிப்பைத் தடுக்க, டிஜிட்டல் தரவுத்தளத்தை உருவாக்கக் கொண்டுவரப் பட்ட சட்டமாகும். துருக்கி மற்றும் கத்தார் போன்ற நாடுகளில் உள்ள வக்ஃப் சட்டங்களைப் போலச் சர்வதேச தரத்துடன் இந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.