வக்ஃப் சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றத் தயாராகி வருகிறது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு மதத்தவர்களுக்கும் தனித்தனி உரிமையியல் சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இந்து மதத்தவர்களுக்காக தனிச் சட்டம் உள்ளது. பழங்குடியினருக்கென்று தனிச் சட்டங்கள் உள்ளன.
சீக்கியர்கள் தங்கள் பாதுகாப்புக்காக எந்நேரமும் கத்தி வைத்திருப்பதற்கும், இராணுவம், காவல் துறையில் பணிபுரிந்தாலும்,பணி விதிகளுக்கு மாறாகத் தலையில் டர்பன் வைத்துக் கொள்ளவும் தனிச் சட்டம் அனுமதி அளிக்கிறது. இஸ்லாமியர் பின்பற்றும் ஷரியத் சட்டமே, 1937ம் ஆண்டு முஸ்லீம் தனிநபர் சட்டமானது.
இப்படி சட்டங்கள் ஒவ்வொரு மதத்தவருக்கும் தனித்தனியாக இருப்பது, நிர்வாகத்தில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாகவே , அனைத்து மக்களுக்கும் பொதுவான சிவில் சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அனைத்து மதம்,மொழி,இனம் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொது உரிமையியல் சட்டங்களே பொது சிவில் சட்டமாகும். நாட்டின் குடிமக்கள் அனைவரும் சமம் என்று கூறும் அரசியல் சாசனத்தின் 44வது சட்டப் பிரிவும் பொது சிவில் சட்டத்தை வலியுறுத்துகிறது. இதன்படி,நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக, பொது சிவில் சட்டத்தை வரையறுக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பொது சிவில் சட்டம் பாஜகவின் முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். இதைச் சட்டமாக நிறைவேற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாட்டின் 78-வது சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்,பொது சிவில் சட்டம் குறித்தும் தெரிவித்திருந்தார்.
கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக, சிவில் சட்டங்கள் மதவாதம் சார்ந்ததாக இருக்கின்றன என்று பெரும்பான்மையான மக்கள் நம்புவதாகக் கூறிய பிரதமர் மோடி, நடைமுறையில் உள்ள சிவில் சட்டங்கள் மத ரீதியாக நாட்டைப் பிளவு படுத்துகின்றன என்றும் கூறியிருந்தார்.
எனவே, மதச்சார்பற்ற சிவில் சட்டம் காலத்தின் தேவை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களின் கனவை நனவாக்குவது இந்தியர்களின் கடமை என்றும் கூறியிருந்தார்.
இந்தியாவில் அரசியல் அமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப் பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், அரசியலமைப்பு மீதான சிறப்பு விவாதம் மக்களவையில் நடந்தது. நிறைவு நாளில், பதிலளித்துப் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் மதச்சார்பற்ற பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தார்.
இந்த சூழலில், விடுதலைக்குப் பின் நாட்டின் முதல்முறையாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கடந்த ஜனவரி மாதம் அமலுக்கு வந்தது. தனது மூன்றாவது ஆட்சிக்காலம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக இருக்கும் என்று ஏற்கெனவே கூறியிருந்த பிரதமர் மோடி, வக்ஃப் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றி இருக்கிறார்.
வக்ஃப் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்த நிலையில், பிரதமர் மோடி, அடுத்ததாக பொது சிவில் சட்டத்தைக் கையில் எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை, ஹரியானாவில் அம்பேத்கார் பிறந்தநாள் பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அரசியல் அமைப்பு சட்டம் கூறும் அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம் என்பதையே தான் மதச் சார்பற்ற சிவில் சட்டம் என்று குறிப்பிடுவதாகத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அதனைக் காங்கிரஸ் செயல்படுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், உத்தரகாண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தபின் அதிரடியாக பொது சிவில் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். ஏற்கெனவே, கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி, 23வது சட்ட ஆணையத்துக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டது. 7 மாதங்களுக்குப் பிறகு, இப்போது மத்திய அரசு,ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
23வது சட்ட ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி நியமிக்கப் படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆணையத்தின் முழுநேர உறுப்பினர்களாக வழக்கறிஞர் ஹிதேஷ் ஜெயின் மற்றும் பேராசிரியர் டி.பி. வீரம் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
வரும் வாரங்களில் பல்வேறு சமூக மற்றும் மதக் குழுக்களுடன் ஆணையம் ஆலோசனைகளைப் பெறத் தொடங்கும் என்றும், பொது சிவில் சட்டத்தின் நன்மைகள் குறித்த பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது.