விழுப்புரம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட நபர் இறந்து விட்டதாக வெளியான தவறான தகவலால் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் உடல்நலக்குறைவால் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை வீட்டுக்கே திருப்பி அனுப்பி வைத்தனர். இந்நிலையில், உறவினர்கள் சிலர் கொடுத்த தவறான தகவலால், பிரகாஷ் உயிரிழந்துவிட்டதாக எண்ணி, அவரை அடக்கம் செய்ய ஏற்பாடு நடைபெற்றுள்ளது.
ஆனால், ஆம்புலன்சில் வந்த பிரகாஷ் திடீரென கண் விழிக்கவே,உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், முழு விவரங்களை அறிந்த அவர்கள், பிரகாஷை மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.