தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணத்தை நடத்தாமல் மாப்பிளை வீட்டார் காலம் தாழ்த்தியதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
வேப்பத்தூர் பேரூராட்சியைச் சேர்ந்த சத்யபிரியாவுக்கு, திம்மங்குடி பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவருடன் கடந்தாண்டு மே மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதையடுத்து 11 மாதங்கள் ஆகியும் திருமணத்தை நடத்தாமல் மாப்பிளை வீட்டார் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த சத்யபிரியா, தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சத்யபிரியா உயிரிழந்தார்.
தனது மகளின் இறப்பிற்குக் காரணமான விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சத்யபிரியாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.