பூமியிலிருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிரகத்தில் உயிர் இருப்பதற்கான சாத்தியக்கூறு ஆதாரங்களைக் கண்டறிந்துள்ள இந்தியா வம்சாவளி விஞ்ஞானி நிக்கு மதுசூதனுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
1980ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த மதுசூதன், பின்னர் அமெரிக்கா சென்று மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தை முடித்துள்ளார்.
இந்திய வம்சாவளியும், வான் இயற்பியல் விஞ்ஞானியுமான நிக்கு மதுசூதனும் அவரது குழுவினரும் பூமிக்கு அப்பால் வாழ்வதற்கான தெளிவான அடையாளத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
நிக்கு மதுசூதனின் கண்டுபிடிப்பு நமது சூரிய மண்டலத்தில் உள்ள எந்த கிரகத்துடனும் தொடர்புடையது அல்ல என்றும், பூமியிலிருந்து சுமார் 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வரும் K2-18b எனப்படும் தொலைதூர கிரகத்துடன் தொடர்புடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
K2-18bஇன் வளிமண்டலத்தை ஆராய்ந்து வரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகமும், தொலைதூர கிரகத்தில் உயிரினங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறுகளை அடையாளம் கண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதேபோல, கிரகத்தின் வளிமண்டலத்தில் மீத்தேன் மற்றும் கார்பன் சார்ந்த மூலக்கூறுகள் இருப்பதை நாசாவும் கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.