மேற்கு வங்கத்தில் பரபரப்பு ஏற்படுத்திய ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில், உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த 2016ம் ஆண்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியான பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்காக, மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் ஓர் ஆசிரியர் நியமனக் குழு அமைக்கப் பட்டது. அதன்படி, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கென தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.
ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு உதவி ஆசிரியர்களுக்கான 12905 பணியிடங்கள் மற்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு உதவி ஆசிரியர்களுக்கான 5712 பணியிடங்கள் GROUP-C வகையில் ஆசிரியர் அல்லாத 2607 பணியிடங்கள் மற்றும் GROUP-D வகையில், ஆசிரியர் அல்லாத 3956 பணியிடங்கள் என மொத்தம் 24 ஆயிரத்து 640 ஆசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தகுதித் தேர்வில், 23 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள்.
தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், 25ஆயிரத்து 753 பேருக்கு,மாநில பள்ளிக்கல்வித்துறை பணி நியமன ஆணை வழங்கியது. பணி நியமன ஆணை பெற்றவர்கள், கடந்த 2016-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், மேற்கு வங்க அரசின் ஆசிரியர் பணியிட நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கும், தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கும்,தேர்வே எழுதாதவர்களுக்கும், பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருப்பதாக, பாதிக்கப்பட்டோர் தரப்பில், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த அன்றைய தலைமை நீதிபதி அபிஜித் கங்குலி, ஆசிரியர் பணியிட நியமன ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவையடுத்து, தனியாக வழக்குப் பதிவு செய்த சிபிஐ தீவிர விசாரணை நடத்தியது. மேற்கு வங்க கல்வி அமைச்சரான பார்த்தா சாட்டர்ஜி சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப் பட்டது.
இந்த சோதனையில் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜி வீட்டில் 50 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, பார்த்தா சாட்டர்ஜி, அவரின் உதவியாளர் அர்பிதா முகர்ஜி மற்றும் சில ஆளுங்கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஏப்ரலில் அரசின் நியமனக் குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட 25,753 பேரின் பணி நியமனங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. மேலும், முறைகேடான முறையில் பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் அனைவரும் பணி நியமனம் பெற்ற 2016-ம் ஆண்டு முதல் இதுவரையில் பெற்ற அரசு சம்பளத்தை 12 சதவீத வட்டியுடன் நான்கு வாரத்துக்குள் திருப்பி அளிக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மேற்கு வங்க அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து ஆசிரியர் பணி நியமனங்களுக்கான தேர்வு செல்லாது என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், நியமனங்கள் ரத்து செய்யப்பட்ட ஊழியர்கள், இதுவரை பெற்ற சம்பளம் மற்றும் பிற ஊதியங்களைத் திருப்பித் தரத் தேவையில்லை என்று கூறியுள்ள நீதிபதிகள், மனிதாபிமான அடிப்படையில், மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பணியில் தொடரலாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
குறிப்பாக, பணி ஆணை பெற்றும் வேலை இழந்த 13,௦௦௦-க்கும் மேற்பட்ட உதவி ஆசிரியர்கள் பணியில் நீடிக்கவும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், வரும் மே 31 ஆம் தேதிக்குள், ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான விளம்பரங்களை வெளியிடுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், இந்த ஆண்டு இறுதிக்குள், தகுதித் தேர்வு மற்றும் பணி நியமனங்களை முடிக்குமாறும் ஆணையிட்டுள்ளது.