தமிழகத்தில் முதன்முறையாகக் கட்டட கழிவுகளில் இருந்து மறுசுழற்சி அடிப்படையில் மணல் உற்பத்தி செய்யும் நடைமுறையைச் சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. ஐஐடி அங்கீகாரத்துடன் கட்டடக் கழிவுகளில் இருந்து மணல் தயாரிக்கும் முறை குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்காக நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் லோடு மணல் தேவை இருக்கிறது.
தமிழகம் முழுவதும் கணக்கிடும் போது சுமார் ஒரு கோடி யூனிட் மணல் தேவைப்படும் எனக் கூறப்படும் நிலையில், ஆற்று மணலை எடுக்கப் பல்வேறு சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதால் மணல் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது. ஆற்று மணலுக்கு மாற்றாகத் தயாரிக்கப்பட்ட எம்சாண்ட் மணலும் போதுமான பயனளிக்காத நிலையில் அதற்கு மாற்று மணல் தயாரிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி முதற்கட்டமாக இறங்கியுள்ளது.
ப்ரீத்… வீடுகள் பழுதுபார்ப்பு, ஓடுகள், அலமாரிகள், உடைந்த பீங்கான்கள், சானிட்டரி பொருட்களைக் கட்டணமின்றி வசூலிக்கச் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
குடியிருப்புவாசிகள் தங்களின் கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகளை அகற்றுவதற்கு 1913 என்ற உதவி எண் மூலமாகவும், மாநகராட்சியின் இணையதளம் மூலமாகப் பதிவு செய்து சேவையைப் பெறலாம் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அவ்வாறு பெறப்படும் கழிவுகள் கொடுங்கையூர் அல்லது பெருங்குடி குப்பைக் கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு கட்டடக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும் எனவும், அதற்கு டன் ஒன்றுக்கு 2 ஆயிரத்து முதல் 3 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்து உருவாக்கப்படும் இந்த மணல் ஆற்று மணலை விட விலை குறைவாகவும், தரமானதாகவும் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மணலுக்கான அங்கீகாரத்தை சென்னை ஐஐடி வழங்கியிருக்கும் நிலையில், விமான நிலையம், எல் & டி உள்ளிட்ட பல்வேறு கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கட்டுமானக் கழிவுகளைச் சாலையோரங்களிலும் நீர் நிலைகளிலும் கொட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதோடு, குறைந்த செலவில் தரமான மணலை உருவாக்கும் இந்த மறுசுழற்சி முயற்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.