நீலகிரியில் இன்று முதல் 5 சோதனை சாவடிகளில் மட்டுமே இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோடைக் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் நீலகிரிக்குச் செல்வதால் வாகன நெரிசல் ஏற்படுவதோடு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்ட உயர்நீதிமன்றம் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் எடுத்து வர வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால், புதிய கட்டுப்பாடுகளுடன் விதிக்கப்பட்ட இ-பாஸ் நடைமுறையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதன் எதிரொலியாக இ-பாஸ் நடைமுறை நீலகிரியில் உள்ள 5 சோதனை சாவடிகளில் மட்டுமே கடைப்பிடிக்கப்படும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் கல்லாறு, குஞ்சப்பனை, மசினகுடி, மேல் கூடலூர், கெத்தை ஆகிய சோதனை சாவடிகளில் மட்டுமே இனி இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.