இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரதமர் மோடியைச் சந்தித்தனர்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அவரது மனைவி மற்றும் குழந்தைகள், 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்தனர். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அவர்களுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உற்சாக வரவேற்பு அளித்தார்.
இதையடுத்து அக்ஷர்தாம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர்கள், பிரதமர் மோடியைச் சந்திக்க அவரது அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வந்தனர். அப்போது, அவர்களுக்குப் பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு அளித்தார்.
இதையடுத்து அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்ற பிரதமர் மோடி, துணை அதிபர் ஜே.டி.வான்ஸுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவரது 3 குழந்தைகளுக்கும் பிரதமர் மோடி மயிலிறகை அன்புடன் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது, இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இருவரும் விவாதித்தனர்.
வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதென்றும் முடிவு செய்தனர். பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்த ஆண்டு இறுதியில் அவர் இந்தியா வருவதை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்தார்.