குத்தகை வீடுகளை உள்வாடகைக்கு விட்டால் மோசடி வழக்காகப் பதிவு செய்யப்படும் எனத் தமிழக டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை முகப்பேரில் குத்தகைக்கு எடுத்த வீட்டை உரிமையாளருக்குத் தெரியாமல் 3வது நபருக்கு அடமானம் வைத்து மோசடி செய்ததாக ராமலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவருக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில், பிணையை ரத்து செய்யக் கோரி வீட்டின் உரிமையாளர் கனகராஜ் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, உள்வாடகை மோசடிகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகத் தமிழக டிஜிபி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், உள்வாடகை புகார்களை சிவில் வழக்காகப் பதிவு செய்யாமல் மோசடி வழக்காகப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மோசடியைத் தடுக்கவும், கண்காணிக்கவும் மாவட்டம் தோறும் உயர்மட்ட அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான வீடியோ தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விழிப்புணர்வு வீடியோவை சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிட்டு மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டார்.