காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல சுற்றுலா தலமான பஹல்காம் நகரில் நேற்று சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் இதமான கால சூழலை அனுபவித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள், சுற்றுலா பயணிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் மஞ்சுநாத் ராவ் உள்ளிட்ட 28 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்தவர்கள் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ள வீடியோவில், உயிரிழந்த சுற்றுலா பயணிகள் தரையில் விழுந்து கிடக்கும் காட்சிகள் நெஞ்சை உலுக்கும் வகையில் இருந்தது.
குறிப்பாக தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த கணவனின் உடலுக்கு அருகில் சோகத்தில் உறைந்த அவரது மனைவி அழுவதற்கு கூட ஆற்றலின்றி அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தது நெஞ்சை உலுக்கியது.
இதனிடையே துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பாக சுற்றுலா பயணிகளின் பெயர் மற்றும் அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் மிரட்டிக் கேட்டதாகவும் உயிர் தப்பியவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். ஒரு சில பயணிகளின் ஆடைகளை களைந்த பின்னர் அவர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கொடூரத் தாக்குதல் சம்பவத்திற்கு லஷ்கர்-இ -தொய்பா அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதனிடையே ஆறு தீவிரவாதிகள் பஹல்காமில் கொடூரத் தாக்குதலை நடத்தி உள்ளதாகவும், ஏ.கே.-47 ரக துப்பாக்கியை அவர்கள் பயன்படுத்தியதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.