தமிழகத்தில் காலியாக இருந்த 621 காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான திருத்தியமைக்கப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடைமுறைகள் முடிந்து 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் இட ஒதுக்கீட்டு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனக்கூறி தேர்வு செய்யப்படாத விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது, திருத்தியமைக்கப்பட்ட தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் தற்காலிகத் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து இந்த பட்டியலை ரத்து செய்யக்கோரி முதல் பட்டியலில் இடம் பெற்று, பெயர் நீக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனுதாரர்கள் வாதத்தை ஏற்று திருத்தியமைக்கப்பட்ட தற்காலிக தேர்வுப் பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டார்.
முறையாக இட ஒதுக்கீட்டு நடைமுறைகளை பின்பற்றி புதிய தேர்வுப் பட்டியலை தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி,
புதிய தேர்வுப் பட்டியலை 3 மாதங்களுக்குள் தயாரித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவர் வசம் ஒப்படைக்க வேண்டும் என ஆணையிட்டார்.