ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலால் ஆழ்ந்த வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் தீர்க்கமான தலைமையின் கீழ், பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு உறுதியான போரை இந்தியா அறிவித்துள்ளது என்றும், இந்த கொடூரமான செயலைச் செய்தவர்கள் தப்ப முடியாது என்றும்அவர்களின் தீய நோக்கங்கள் நசுக்கப்படும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மனிதகுலத்தின் மீதான கோழைத்தனமான தாக்குதல் என தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற தீவிரவாத செயல்கள் நமது நாட்டின் உணர்வை ஒருபோதும் உடைக்காது என்றும் நாம் ஒற்றுமையாகவும், உறுதியுடனும், நிற்போம் என தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.