சீன விமான நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்ட போயிங் விமானங்களை வாங்க ஏர் இந்தியா முயற்சி செய்து வருகிறது. அமெரிக்க சீனா வர்த்தகப் போரால், இந்திய விமான நிறுவனங்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்று கூறப்படுகிறது. அது பற்றி இந்த செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
நாளுக்கு நாள், சீன-அமெரிக்க வர்த்தகப் போர் தீவிரமடைந்து வருகிறது. கடும் வரிகளை விதித்துள்ள அமெரிக்காவுக்கு எதிராகச் சீனாவும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தின் விமானங்களை, சீன விமான நிறுவனங்கள் வாங்கக் கூடாது என சீனா அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சீன விமான நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான விமானங்களுக்கு விமான உபகரணங்களை அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து வாங்குவதையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சீன அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
சீனாவின் இந்த உத்தரவைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் போயிங் பெறும் இழப்பைச் சந்தித்துள்ளது. போயிங் பங்கின் மதிப்புகள் 3 சதவீதம் வரை சரிந்துள்ளது.
முன்னதாக, சீனாவின் ஏர் சைனா 45 விமானங்களையும், ஈஸ்டர் ஏர்லைன்ஸ் 53 விமானங்களையும், சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் 81 போயிங் விமானங்களையும் ஆர்டர் செய்திருந்தன. அடுத்த இரண்டு ஆண்டுகளில், 179 போயிங் விமானங்களை வாங்குவதற்கு சீனா தயாராகியிருந்தது. இந்த சூழலில், தான் போயிங் விமானங்களை வாங்கக் கூடாது எனச் சீன அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சீன ஏற்றுமதி பொருள்களுக்கு அமெரிக்கா 245 சதவீதம் வரி விதித்து உள்ளதால் சீனாவும்,அமெரிக்கா மீது 125 சதவீத வரி விதித்துள்ளது. சீன இறக்குமதி வரியால் போயிங் 737 விமானத்தின் விலை 470 கோடி ரூபாயிலிருந்து 1,057 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதனால், சீனாவுக்கு டெலிவரி செய்யத் தயார் நிலையில் இருந்த Boeing 737 MAX ரக விமானங்களை போயிங் சீனாவிலிருந்து திரும்பப் பெறும் எனக் கூறப்படுகிறது.
தயார் நிலையிலிருக்கும் போயிங் விமானங்களைப் பெற்றுக் கொள்வதைச் சீன விமான நிறுவனங்கள் நிறுத்திக் கொள்ளும் பட்சத்தில், அவற்றைக் கொள்முதல் செய்வது தொடர்பாக, மலேசியன் ஏர்லைன்ஸின் தாய் நிறுவனமான MAG எனப்படும் Malaysia Aviation Group, போயிங் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, இந்த விமானங்களில் சில, இந்தியாவின் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஆகாசா ஏர் ஆகிய நிறுவனங்களுக்குத் திருப்பி விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விமானத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே, சீனாவுக்காக முதலில் தயாரிக்கப்பட்ட நாற்பத்தொன்று 737 மேக்ஸ் ஜெட் விமானங்களை, ஏர் இந்தியா வாங்கி உள்ளது. மொத்த விமான எண்ணிக்கையை 50 ஆக உயர்த்தும் வகையில், வரும் ஜூன் மாதத்துக்குள், சுமார் ஒன்பது 737 விமானங்களை ஏர் இந்தியா வாங்கத் திட்டமிட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள விமான நிறுவனங்களுக்குக் கடுமையான விமானத் தேவை ஏற்பட்டுள்ள நிலையில், உலகின் முன்னணி விமான நிறுவனமான போயிங் தடுமாறுகிறது என்று கூறப்படுகிறது.
அமெரிக்க சீன வர்த்தக மோதலால், விமான சந்தையிலும் இந்திய நிறுவனங்களுக்கு லாபம் என்று விமானத் துறை நிபுணர்கள் கூறுகிறார்கள்.