ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் இந்து என்பதை உறுதி செய்த பின், இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள இந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணி என்ன? சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டது ஏன்? இந்த தாக்குதலுக்கு யார் காரணம்? என்பதைப் பற்றி விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
குளிர்காலத்தில் பனி மூடிய சொர்க்கம் என்றால், கோடைக் காலத்தில் வெதுவெதுப்பான சொர்க்கமாக, .எல்லா காலங்களிலும் வசீகரமாக இருக்கும் காஷ்மீர் காலத்தால் அழியாத இயற்கை அழகு உடையது.
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பகல் ஹாம் பகுதியில் பைசரன் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது சுற்றிலும் மலைகள், அவற்றில் உயரமான பைன் மரங்கள் நடுநடுவே பசுமையான புல்வெளிகள் என்று இயற்கை அழகு கொஞ்சும் இந்தப் பகுதி ஒரு மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்குச் சாலை வசதி கிடையாது. குதிரை மூலமாகவோ, நடந்தோ தான் பைசரன் பகுதிக்குச் செல்ல முடியும்
சமீப காலமாக, ஜம்மு காஷ்மீருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், தவறாமல் வந்து செல்லும் இடமாக பைசரன் பள்ளத்தாக்கு மாறியுள்ளது. வசந்த காலம் தொடங்கியுள்ள நிலையில், வழக்கம்போல் ஏப்ரல் 22 ஆம் தேதி, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது.
புல்வெளியில் குடும்பத்தோடு அமர்ந்திருந்து இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியும், குழந்தைகளோடு ஓடியாடி விளையாடியும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.
மாலை 3 மணி அளவில், திடீரென பள்ளத்தாக்கின் பைன் மரக் காடுகளில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் ராணுவ உடையில் வெளியே வந்தனர். நான்கு புறங்களிலும், புல்வௌியைச் சூழ்ந்து கொண்டனர். கையில் இயந்திரத் துப்பாக்கிகளுடன் இருந்த தீவிரவாதிகளைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட முயற்சித்தனர்.
கண்இமைக்கும் நேரத்தில் சுற்றுலாப் பயணிகளைச் சுற்றி வளைத்த தீவிரவாதிகள், சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குண்டுக் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். பனிக் காற்றில் இரத்த வாடையுடன் மரண ஓலம் எதிரொலித்தது.
இந்து என்பதை உறுதி செய்த பிறகே, தீவிரவாதிகள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வீடியோக்கள், சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. சுற்றுலாப் பயணிகள் தரையில் இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதும், பெண்கள் மற்ற சுற்றுலாவினர் அழுதுகொண்டு இருப்பதும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உதவி கேட்டுக் கெஞ்சுவதும், நெஞ்சை உருக்குவதாக உள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370 வது சட்டப் பிரிவு நீக்கப் பட்ட சிலமணி நேரத்தில்,தொடங்கப்பட்ட பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பாக செயல்பட்டு வரும் ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பு, கொடூரமான பகல்ஹாம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு,ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பை இந்திய அரசு தடை செய்தது. அதன் தலைவர், ஷேக் சஜ்ஜாத் குல்லையைத் தேடப்படும் தீவிரவாதியாகவும் இந்திய அரசு அறிவித்தது. நாடு முழுவதும் இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கான பதிவு நடந்து கொண்டிருக்கும் வேளையில், பகல் ஹாமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கர தாக்குதல் நடந்துள்ளது.
38 நாள் அமர்நாத் யாத்திரை, வரும் ஜூலை 3ம் தேதி தொடங்க உள்ளது. பொதுவாக, அமர்நாத்துக்குச் செல்லும் பகல்காம் பாதை எளிதான பாதையாகும். எனவே அதிக பக்தர்கள்,இந்தப் பாதையையே தேர்ந்தெடுப்பார்கள் . எனவே தான், தீவிரவாதிகள், பக்லஹாமில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதை “கலாச்சார படையெடுப்பு” என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ( Agha Syed Ruhullah Mehdi ) ஆகா சையத் ருஹுல்லா சமீபத்தில் கூறியிருந்தார்.
மேலும், 1990களின் முற்பகுதியில் காஷ்மீர் பண்டிதர்கள் கொல்லப்பட்டதும் வெளியேற்றப் பட்டதும் போன்ற சம்பவங்கள் “மீண்டும் நிகழலாம்” என்று ருஹுல்லா ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் எச்சரித்திருந்தார்.
இதேபோல், கடந்த புதன்கிழமை, இஸ்லாமாபாத்தில் நடந்த வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்கள் மாநாட்டில் பேசிய பாகிஸ்தானின் தலைமை இராணுவத் தளபதி அசிம் முனீர், வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும், இந்துக்களுடன் இணைந்து வாழ முடியாது எனக் கூறியிருந்தார்.
கூடுதலாக, பாகிஸ்தானும் இந்தியாவும் ஒரே நாடு அல்ல என்று தெரிவித்த அசிம் முனீர், இப்படி பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக உருவான கதையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், பகல் ஹாமில் தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைச் சுட்டுக் கொன்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த மிகப் பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது.
2016 ஆம் ஆண்டு செப்டம்பரில், ஜம்மு-காஷ்மீரின் உரியில் உள்ள இந்திய ராணுவத்தின் படைப்பிரிவு தலைமையகத்தைத் தீவிரவாதிகள் தாக்கியதில், 17 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அடுத்த 10 நாட்களுக்குள் இந்தியா கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டிச் சென்று, தொடர்ச்சியான சர்ஜிக்கல் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியது.
2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 40 CRPF வீரர்களின் உயிரைக் கொன்ற புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கும் பதிலடியை இந்தியா உடனடியாக கொடுத்தது.
தற்போதைய லெப்டினன்ட் ஜெனரல் எம்.வி. சுசீந்திர குமார், வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். அதற்குள், பகல்ஹாம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? புதிய லெப்டினன்ட் ஜெனரலாக பிரதிக் சர்மா பதவி ஏற்கும் வரை காத்திருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.