தேனி மாவட்டம் கம்பம் நகரில் பெண் போலீஸ் ஏட்டு அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கூடலூர் கே.கே நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் பாண்டியராஜன் என்பவரது மனைவி அம்பிகா, கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றார்.
இவர் பணி நிமித்தமாகத் தேனி மாவட்ட நீதிமன்றத்திற்குச் சென்று விட்டு கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே நின்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த நபர் அம்பிகாவை கீழே தள்ளிவிட்டுத் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றுள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்த நிலையில் அந்த நபர் தப்பி ஓடினார். இதில் கண் பகுதியில் காயமடைந்த அம்பிகா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குபேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் முன் விரோதம் காரணமாக போலீஸ் ஏட்டு அம்பிகாவை கொல்ல முயன்றது தெரிய வந்தது.