டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றும் விருதுநகரில் காலிப் பணியிடங்கள் இல்லை எனக்கூறி மாவட்ட நிர்வாகம் அலைக்கழிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
விருதுநகர், தென்காசி, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த 12 பேர், கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
கலந்தாய்வில் அவர்களுக்கு விருதுநகர் மாவட்டத்தில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. பணி ஆணையும் வழங்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்த அனைவரும், இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட அதிகாரிகளை அணுகியுள்ளனர்.
மாவட்டத்தில் தற்போது காலிப்பணியிடங்கள் இல்லை எனக்கூறிய அதிகாரிகள், ஒரு மாத காலமாக 12 பேரையும் அலைக்கழித்துள்ளனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை சந்தித்து தங்கள் நிலையை எடுத்துரைத்துள்ளனர்.
அப்போது, அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்குமாறு அவர் கூறியதால் அதிர்ச்சியடைந்த 12 பேரும், அரசு தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வழங்கப்படாதது மிகுந்த மன வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.