மகேந்திரகிரி திரவ இயக்க உந்தும வளாகத்தில் 200 டன் எடை கொண்ட செமி கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம், திசையன்விளையில் உள்ள தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன், மகேந்திரகிரி திரவ இயக்க உந்தும வளாகத்தின் இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், இஸ்ரோவின் முதல் ராக்கெட்டில் 40 கிலோ செயற்கைக்கோளுடன் ஏவப்பட்டதாகவும், தற்போது 30 ஆயிரம் கிலோ செயற்கைக்கோள்களை கொண்டு செல்லும் வகையில் ராக்கெட் தயாரிக்க 8 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சந்திராயன் 4 திட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக கூறிய அவர், செவ்வாய் கோள் ஆராய்ச்சிக்கான பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். மேலும், 2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா சார்பில் விண்வெளி ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.