பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் துணை வேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்த விதம், அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது என்று தமிழக ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காவல்துறையைப் பயன்படுத்தி, இன்று முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்த விதம், அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார்.
மாநில உயர்கல்வி அமைச்சர், துணை வேந்தர்களிடம் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று தொலைபேசியில் மிரட்டல் விடுத்தது பலனளிக்காத நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காவல்துறையைப் பயன்படுத்தியுள்ளார் என்று ஆளுநர் ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
மாநாட்டு நாளில் ஒரு துணைவேந்தர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஊட்டியை அடைந்த மற்றவர்கள் தங்கிய விடுதிகளின் அறை கதவுகள் நள்ளிரவில் தட்டப்பட்டுள்ளன.
மாநாட்டில் பங்கேற்றால் உயிருக்கு மோசமான விளைவுகள் நேரிடும் என்றும், மாநாட்டில் கலந்து கொண்டால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டீர்கள் என்றும் காவல்துறையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இது காவல்துறையின் அப்பட்டமான துஷ்பிரயோகம் ஆகும்! இங்கு காவல் ராஜ்ஜியமா நடக்கிறது? என்று கேள்வி எழுப்பிய ஆளுநர் ரவி, நிலத்துக்குள் ஒரு கல்வி மாநாட்டில் கலந்து கொள்ள துணை வேந்தர்களுக்கு கல்விச் சுதந்திரம் இல்லையா? அல்லது தலித் மற்றும் ஏழை மாணவர்களுக்குப் பெரிதும் உதவும் மாநில பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்துவதன் விளைவுகள், எந்தவொரு தர மேம்பாடும் மாணவர்களை ஆர்வமுள்ளவர்களாகவும் ஊக்கமளிப்பவர்களாகவும் மாற்றும் என்பதால் இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா? என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.