உளுந்தூர்பேட்டையில் மணல் லாரிகள் மூலம் பணம் வசூலிக்க டி.எஸ்.பி உத்தரவிட்ட ஆடியோ வைரலான நிலையில், அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி வடக்கு மண்டல ஐஜி உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மணல், கூழாங்கற்கள், வண்டல் மண் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த கடத்தல் சம்பவங்களுக்கு போலீசாரும் உடந்தையாகச் செயல்படுவதாகப் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அண்மையில் மணல் லாரி மற்றும் திருவிழாவில் ராட்டினம் இயக்க பணம் பெற்று அனுமதி வழங்கிய குற்றச்சாட்டில், உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி அலுவலகத்தில் பணியாற்றி வந்த இரு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், டி.எஸ்.பி பிரதீப், மணல் லாரிகள் மூலம் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாயாவது வசூலிக்க வேண்டும் எனப் பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.