மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
மதுரை பாண்டிகோயில் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து முன்னணியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இதில், இந்து முன்னணி பொதுச் செயலாளர் முருகானந்தம், தென் பாரத அமைப்பாளர் பக்தன் மற்றும் இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், ஜூன் 22-ஆம் தேதி மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே இந்து முன்னணியின் சார்பில் நடைபெறவுள்ள “முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடு மற்றும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், முருக பக்தர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் தவறாது பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கும் இந்த ஆன்மிக மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.