மதுரையில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட காய்கறி சந்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாததால் வியாபாரிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கீழ்மார்ட் வீதி பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்த காய்கறி சந்தை, சுமார் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது. இந்த சீரமைக்கப்பட்ட கட்டடத்தைக் கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
ஆனால் திறக்கப்பட்டு 2 மாதங்கள் ஆகியும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வராததால் சந்தைக்கு வெளியே வியாபாரிகள் கடை அமைத்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும், சந்தையில் உள்ள கழிவறைகள் திறக்கப்படாததால் பெண் வியாபாரிகள் கடும் அவதியடைந்துள்ளனர். ஆகவே, காய்கறி சந்தையை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.