சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த ஆருஷ் பிறந்த 23 மாதங்களிலேயே பல சாதனைப் புத்தகங்களில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். ஆருஷுக்கு இருக்கும் தனித்துவமிக்க அறிவாற்றல் குறித்தும் அவர் படைத்த சாதனைகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
குழந்தைகள் வளர்ச்சியடையும் போது சித்திரங்களை அடையாளம் காணத் தொடங்கியதும், அதில் வரும் கார்டூன்களை தங்களாகவே நினைத்துக் கொண்டு சுட்டித் தனங்கள் செய்வது வழக்கமான ஒன்று. ஆனால் சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த தீபக் – அக்ஷயா தம்பதியினரின் குழந்தை ஆரூஷ் சற்று வித்தியாசமானதாக இருக்கிறார்.
பிறந்து பதினெட்டு மாதங்களே ஆன ஆருஷ் பொருட்கள், விலங்குகள் என அனைத்து விதமான அடையாளங்களை அவற்றின் பெயர்களோடு சுட்டிக்காட்டி National Book Of Records-ல் இடம்பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.
ஆரூஷ் பிறந்த சில மாதங்களிலிருந்தே தீபக் – அக்சயா தம்பதியினர் அவரை உடன் அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். செல்லும் இடங்களில் தோன்றும் படங்கள், கண்களுக்குத் தென்படும் அடையாளங்கள் என அனைத்தையும் தங்களின் குழந்தைக்கு ஆருஷுக்கு சொல்லித்தர அது அந்த குழந்தையின் மனதில் அச்சாணி போலப் பதியத் தொடங்கியுள்ளது. அதுவே பின்னாளில் அவரை சூப்பர் குழந்தையாகவும் மாற்றியுள்ளது.
250க்கும் அதிகமான பொருட்களைப் பெயருடன் சுட்டிக்காட்டும் ஆருஷின் திறமையை உணர்ந்த அவரது பெற்றோர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இண்டர்நேசனல் புக் ஆப் ரெக்காட்ஸ் ஆகிய சாதனை விருதுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆருஷின் தனித்துவமிக்க சிந்தனை திறன் மற்றும் நியாபக சக்தி அவருக்கு விண்ணப்பித்த அனைத்து விருதுகளையும் பெற்றுக் கொடுத்தது.
அனைவருமே வியக்கக் கூடிய அளவிற்கான சாதனைகளைப் படைக்க ஆருஷுக்கு தனிப்பட்ட பயிற்சி, வற்புறுத்தலோ வழங்கவில்லை எனவும் அவரின் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே இத்தகைய சாதனைகளைப் படைத்து வருவதாகக் கூறும் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் முறை குறித்தும் விளக்குகின்றனர்.
23 மாதங்களில் அனைவரும் வியக்கும் சூப்பர் கிட்டாக வலம் வரும் ஆருஷ், அடுத்தடுத்த வயதை எட்டும் போது சூப்பர் ஹீரோவாக உருவெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.