வாடிகன் நகரில் நடைபெற்ற போப் ஆண்டவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
உக்ரைன் மீது கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா தொடுத்த போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதில், உக்ரைனுக்கு ஆதரவாக பல ஐரோப்பிய நாடுகள் செயல்படும் நிலையில், போரை நிறுத்துவது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படாத நிலையில், உக்ரைன் மீதான போரை ரஷ்யா மேலும் தீவிரப்படுத்தியது.
இந்நிலையில், வாடிகன் நகரில் நடைபெற்ற போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் டிரம்பும், ஜெலன்ஸ்கியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 15 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது போரை நிறுத்துவது தொடர்பாக இருவரும் விவாதித்தாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான பேச்சுவார்த்தையின்போது நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், டிரம்ப் உடனான சந்திப்பு ஒரு நல்ல சந்திப்பு என குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக நிறைய விவாதித்ததாகவும் கூறியுள்ளார். மேலும், நிபந்தனையற்ற போர் நிறுத்தம், நீடித்த அமைதி மற்றும் கூட்டு முடிவுகளை அடைந்தால் மட்டுமே இந்த சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும் என குறிப்பிட்டுள்ள ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.