பாரத நாடு என்றும் சமாதானத்தை விரும்பும் நாடு என்றும், தூங்குகின்ற புலியை இடரிவிட்டால் ஏற்படும் விளைவை பாகிஸ்தான் கட்டாயம் அனுபவிக்கும் எனவும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள மதுரை ஆதீன மடத்தில் தனியார் மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், உடல் எடை, ரத்த பரிசோதனை செய்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் அனைவரும் உடல் நலத்தை பேணிக் காக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
காஷ்மீர் விவகாரத்தில் தற்போதைய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் எனவும் தெரிவித்தார். பாரத நாடு என்றைக்கும் சமாதானத்தை தான் விரும்புகிறது எனக்கூறிய ஆதீனம், தூங்குகின்ற புலியை இடரிவிட்டால் ஏற்படும் விளைவை பாகிஸ்தான் கட்டாயம் அனுபவிக்கும் எனவும் குறிப்பிட்டார். மேலும், பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு தண்ணீர் நிறுத்தியது சரிதான் எனவும் தெரிவித்தார்.