மக்களுக்கு நன்மை என்றால் எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் கோவை சரவணம்பட்டியில் இரண்டாவது நாளாக நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
அப்போது விஜயை பார்ப்பதற்காக உள்ளூர் இளைஞர்கள் சிலர் மரத்தின் மீது ஏறி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களையும் அனுமதிக்க வேண்டுமெனப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து சிலர் சுவர் ஏறிக் குதித்து கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல முயன்றனர்.
கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், மக்களுக்கு நன்மை என்றால் எந்த எல்லைக்கும் செல்ல தயங்கமாட்டோம் எனத் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் வெறும் அரசியல் ஆதாயத்திற்காகத் தொடங்கப்பட்டதல்ல எனத் தெரிவித்த அவர், சிறுவாணி தண்ணீர் போன்ற சுத்தமான ஆட்சி அமைப்போம் எனக் கூறினார்.
கோவையில் ரோடு ஷோவின் போது விஜய் நோக்கி தொண்டர் ஒருவர் தொப்பியை வீசியுள்ளார். சுதாரித்துக்கொண்ட அவர் விலகிச் சென்ற நிலையில், அவருடைய பாதுகாவலர்கள் அந்த தொப்பியை கைப்பற்றி மீண்டும் தொண்டர்களை நோக்கி வீசினர். இதுதொடர்பான வீடியோ வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது…