மத்திய அரசின் 7-ம் வகுப்பு என்சிஇஆர்டி பாடப்புத்தகத்தில் முகலாயர்கள் பற்றிய பாடத்துக்குப் பதிலாக மகா கும்பமேளா பற்றிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.
புதிய தேசியக் கல்விக் கொள்கை மற்றும் பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2023-க்கு ஏற்ப பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை என்சிஇஆர்டி மாற்றி வருகிறது.
அதன்படி 7-ம் வகுப்புக்கான சமூக அறிவியல் புதிய பாடப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முகலாயர்கள், டெல்லி சுல்தான்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக இந்திய மன்னர்கள் பற்றிய அத்தியாயம், மகா கும்பமேளா பற்றிய குறிப்புகள் மற்றும் மேக் இன் இந்தியா போன்றவை இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக மகா கும்பமேளாவில் 60 கோடி மக்கள் எவ்வாறு பங்கேற்றனர் என்பது குறித்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை புத்தகத்தின் முதல் பகுதி மட்டுமே என்றும், இரண்டாம் பகுதி வரும் மாதங்களில் வெளியிடப்படும் என்றும் என்சிஇஆர்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.