பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்கான 9 அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
அதில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிதிச்சுமை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு நடப்பாண்டிலேயே வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என கூறினார்.
அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்குப் பண்டிகை கால முன்பணம் 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணத்தில் தொழிற்கல்வி பயில ஒரு லட்சம் ரூபாயும், கலை அறிவியல் பயில 50 ஆயிரம் ரூபாயும் உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
அரசுப் பணியாளர்களின் திருமண முன் பணம் ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கான பொங்கல் போனஸ் 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் கூறினார்.
ஓய்வூதியதாரர்களின் பண்டிகை கால முன்பணம் 4 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், மகப்பேறு கால விடுப்பு காலத்தில் தகுதிக்கான பருவத்தைக் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.