பஹல்காம் தாக்குதல் நடைபெற்ற சூழலில் எந்த முகத்துடன் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கேட்க முடியும்? என அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 22-ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, 26 பேர் பலியாகியுள்ள நிலையில் மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசிடம் கேட்பதற்கு அவமானமாக உள்ளது எனக் கூறினார்.
இந்த சூழலில் எந்த முகத்துடன் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கேட்க முடியும்? எனக் கூறியும் அவர் ஆதங்கப்பட்டார்.
இந்த தருணத்தில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோர மாட்டேன் எனத் தெரிவித்த உமர் அப்துல்லா, இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என தனக்குத் தெரியவில்லை எனவும் கூறினார்.
மேலும், சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்புவதைச் செய்ய முடியாததற்காக மன்னிப்பு கேட்க தன்னிடம் வார்த்தைகளே இல்லை எனவும் அவர் வேதனை தெரிவித்தார்.