கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலுள்ள உடற்பயிற்சி கூடங்களில் விற்பனை செய்வதற்காக ஊக்க மருந்து கொண்டு செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊக்க மருந்து பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கட்டுமஸ்தான உடலைப் பெற யாருக்குத்தான் பிடிக்காது. முன்பு, ஓடி ஆடி உடலைச் சீராக வைத்திருந்தவர்கள், இன்றைய நவநாகரீக காலத்தில் தேடுவது உடற்பயிற்சிக் கூடங்களைத் தான். உடல் ஆரோக்கியத்திற்காக ஒரு தரப்பினர் உடற்பயிற்சிக் கூடங்களை நோக்கி ஓடினாலும், மற்றொரு தரப்பினர் சிக்ஸ் பேக், ஃபிட்டான கட்டுமஸ்தான உடல் தோற்றத்திற்காக உடற்பயிற்சிக் கூடங்களை நோக்கி ஓடுகின்றனர்.
இதனால் உணவகங்கள், ஜவுளி கடைகள், நகைக் கடைகளைப்போன்று உடற்பயிற்சி நிலையங்களிலும் கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டியைச் சமாளித்து தங்களின் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க சில உடற்பயிற்சி நிறுவனங்கள் குறுக்கு வழியைப் பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கார் ஒன்றில் உரிய அனுமதி இன்றி கொண்டு வரப்பட்ட ஊக்க மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த ஊக்க மருந்துகள் உடற்பயிற்சி கூடங்களுக்கு விற்பனை செய்வதற்குக் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
சமீபகாலமாக இந்த ஊக்க மருந்து பழக்கம் உடற்பயிற்சி கூடங்களில் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இது உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும் எனத் தெரிவிக்கின்றனர் உடற்பயிற்சியாளர்கள். இந்த மருந்துகளை பயன்படுத்தும்போது மூளை தடுமாற்றம் அடைந்து தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும் என்றும் உடற்பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவர்கள் ஆலோசனை இன்றி பயன்படுத்தப்படும் இதுபோன்ற ஊக்க மருந்துகளால், மாரடைப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கூறுகின்றனர் மருத்துவர்கள். மேலும் இதுபோன்ற மருந்துகளை மனித உடல்களில் செலுத்தினால் நாள்பட்ட நோய்கள் கூட ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நோய்களில் இருந்து உடல்களைப் பாதுகாக்கவே உடற்பயிற்சி கூடங்களை நோக்கி வருவதாகக் கூறும் வாடிக்கையாளர்கள், உடற் பயிற்சிக்கு என்ன பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
போதைப் பழக்க வழக்கம் இளைய சமுதாயத்தைச் சீரழிக்கும் நிலையில், தற்போது உடற்பயிற்சி கூடங்களில் பரவி வரும் இந்த ஊக்க மருந்து கலாச்சாரத்தை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.