திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 40 ஆண்டுகளாக மின்சார வசதி இன்றி இருளில் வாழ்ந்து வரும் மக்கள் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் ஆண்டியப்பனூர் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட 29 கிராமங்களில் ஐயங்கொல்லை கிராமமும் ஒன்றாகும். காப்புக் காட்டிற்கு உள்ளே ஒரு மூலையில் அமைந்துள்ள இந்த கிராமத்திற்குச் சென்று வருவதே, சற்று கடினம்தான்.
இந்த ஊரில் 50-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு பகுதியிலிருந்து இந்த கிராமத்தில் இவர்கள் குடியேறி உள்ளனர். இவர்களின் முதன்மை தொழிலே ஆடு, மாடுகளை வைத்து விவசாயம் செய்து பிழைப்பு நடத்துவது தான். எந்தவொரு அடிப்படை வசதியும் இன்றி தவிக்கும் இவர்களுக்கு, இன்று வரை மின்சார வசதியும் இல்லை என்பது அவலத்தின் உச்சமே. இரவில் நிலவின் ஒளியில் வாழும், இவர்களுக்கு வெளிச்சம் அளிப்பது மண்ணெண்ணெய் விளக்குகளும், டார்ச் லைட்டும் தான்.
இவர்கள் பயன்படுத்தும் செல்போன்களுக்கு சார்ஜ் போட கூட 7 கிலோ மீட்டர் தூரம் சாகச பயணம் செய்து ஆண்டியப்பனூருக்கு செல்லும் நிலையே உள்ளது. தனித் தீவில் வசிக்கும் இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் அதிமுக ஆட்சியின் போது ஊராட்சி நிர்வாகம் சோலார் மின் வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆனால் அவையும் சில ஆண்டுகள் கூட தாக்குப் பிடிக்காமல் பழுதாகி விட்டதாகத் தெரிவிக்கின்றனர் ஐயங்கொல்லை
கிராம மக்கள். இதனால் தங்களின் பிள்ளைகள் கல்வி கற்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகளை அள்ளி கொடுக்கும் அரசியல் கட்சிகளோ தங்களிடம் இருந்து வாக்குகளைப் பெற்று ஏமாற்றத்தையே அளிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் ஐயங்கொல்லை கிராம மக்கள். தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அரசு உடனடியாக செய்து தர வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
40 ஆண்டுகளாக மின்சாரமின்றி தவிக்கும் ஐயங்கொல்லை கிராம மக்களுக்கு மின்சாரத்தின் மூலம் அரசு விடியலைத் தருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.