என்.ஐ.ஏ கோரிக்கையை ஏற்று தஹாவூர் ராணாவின் காவலை மேலும் 12 நாட்கள் நீட்டித்து பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் படகுகள் மூலம் ஊடுருவி தாஜ் ஹோட்டல், ரயில் நிலையம், யூத வழிபாட்டுத் தலம் உட்படப் பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்குத் திட்டம் தீட்டிக்கொடுத்த தீவிரவாதி தஹாவூர் ராணா அமெரிக்காவில் கைதானார். பின்னர் இந்தியாவின் கோரிக்கைக்கு இணங்க ராணாவை அமெரிக்க அரசு இந்திய என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. தொடர்ந்து பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தஹாவூர் ராணாவை, 18 நாட்கள் என்.ஐ.ஏ காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி சந்தர் ஜித் சிங் அனுமதி வழங்கினார்.
இந்நிலையில், 18 நாட்கள் காவல் நிறைவடைந்த நிலையில் மீண்டும் தஹாவூர் ராணா பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது என்.ஐ.ஏ தரப்பில் காவல் நீட்டிப்பு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சந்தர் ஜித் சிங் தஹாவூர் ராணாவின் என்.ஐ.ஏ காவலை மேலும் 12 நாட்கள் நீட்டித்து அனுமதி வழங்கினார்.