பாஜக மாநில பொது செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் மீது திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முரசொலி நிலம் பஞ்சமி நிலம் என கூறி பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் தேசிய பட்டியலின ஆணையத்திற்கு புகார் கடிதம் அனுப்பிய நிலையில், அதனை முகநூல் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு திமுகவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ராம ஸ்ரீனிவாசனுக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராம ஸ்ரீனிவாசன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், புகார் கடிதத்தை சமூக வலைதளத்தில் பதிவிடுவது அவதூறாகாது என ராம ஸ்ரீனிவாசன் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ராம ஸ்ரீனிவாசனுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.