நெல்லை அரசு மருத்துவமனையில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நெல்லை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உள்நோயாளிகளும், ஆயிரக்கணக்கான புற நோயாளிகளும் சிகிச்சை பெற வருகை தருகின்றனர்.
அவர்களுக்குத் துணையாக வரும் உறவினர்களும் இரவு நேரங்களில், நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகளுக்கு வெளியே படுத்து உறங்குவது வாடிக்கை. இந்நிலையில், அரசு மருத்துவமனை வளாகத்தில் நாய்களின் தொல்லை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக நோயாளிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இரவு நேரங்களில் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக்கொள்ளும் நாய்கள், எந்த நேரத்திலும் நோயாளிகளையோ அவர்களின் உறவினர்களையோ கடிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மாநகராட்சி நிர்வாகம் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.