வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கப் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்கச் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
அதிமுக ஆட்சியின்போது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால், வழக்கினை சிபிஐ வசம் ஒப்படைக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்க முடியாது எனக்கூறி காவல்துறையின் மனுவை நிராகரித்து ஆணையிட்டார்.