இந்தியாவின் ராணுவ செலவினம், பாகிஸ்தானை விட ஒன்பது மடங்கு அதிகம் என்று சிப்ரி என்ற ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இருநாடுகளின் ராணுவத் திறன்களில் பெரிய வேறுபாடு உள்ளதாகச் சர்வதேச அறிக்கை வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு உலக இராணுவ செலவினங்களின் போக்குகள் என்ற தனது ஆய்வு முடிவுகளை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டுக்கான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு, மொத்த உலக இராணுவச் செலவுகள் 2.71 லட்சம் கோடி அமெரிக்க டாலர் ஆகும். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 9.4 சதவீதம் அதிகமாகும். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உலக நாடுகள் கடந்து ஆண்டு இராணுவத்துக்கு அதிகம் செலவழித்துள்ளன. இதற்கு உக்ரைன்-ரஷ்யா மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணம் என்று கூறப் பட்டுள்ளது.
சர்வதேச அளவில் இராணுவச் செலவினங்களில், அமெரிக்கா, சீனா,ரஷ்யா,ஜெர்மனி,இந்தியா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. உலகின் மொத்த இராணுவச் செலவுகளில், இந்த 5 நாடுகளின் பங்கு 60 சதவீதமாகும்.
உலகிலேயே அதிகபட்சமாக, அமெரிக்கா தனது இராணுவத்துக்காக 99,700 கோடி அமெரிக்க டாலர் செலவு செய்துள்ளது. இது உலகின் மொத்த இராணுவச் செலவுகளில் 37 சதவீதமாகும்.
ரஷ்யா உள்ளடக்கிய ஐரோப்பியக் கண்டத்தில் இராணுவச் செலவினம் 17 சதவீதம் அதிகரித்து 69,300 கோடி டாலராக உள்ளது. கடந்த ஆண்டு உலகளாவிய இராணுவச் செலவு அதிகரிப்புக்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.
ஜெர்மனியின் இராணுவச் செலவு 28 சதவீதம் அதிகரித்து 8,850 கோடி டாலராக உயர்ந்துள்ளது. ஐரோப்பாவில் இதன் காரணமாக, உலகின் நான்காவது பெரிய இராணுவச் செலவு செய்யும் நாடாக ஜெர்மனி உள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.2 சதவீதம் ,இராணுவத்துக்காகச் செலவு செய்த போலந்து கடந்த ஆண்டு, 3,800 கோடி டாலர் இராணுவத்துக்காகச் செலவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 31 சதவீதம் அதிகமாகும்.
மூன்று ஆண்டுகளாக உக்ரைன் மீது போர் நடத்திவரும் ரஷ்யாவின் கடந்த ஆண்டு இராணுவச் செலவு, 14,900 கோடி டாலராகும். இது முந்தைய ஆண்டை விட 38 சதவீதம் அதிகமாகும் . ரஷ்யாவின் உள்நாட்டு உற்பத்தியில் இது 7.1 சதவீதமாகும். மேலும் மொத்த அரசு செலவினத்தில் இது 19 சதவீதமாகும்.
இன்னொரு பக்கம், உக்ரைனின் மொத்த இராணுவத்துச் செலவு 2.9 சதவீதம் அதிகரித்து 6,470 கோடி டாலராக உள்ளது. இது ரஷ்யாவின் செலவில் 43 சதவீதமாகும். உக்ரைன்,தனது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 34 சதவீதத்தை இராணுவத்துக்காகச் செலவு செய்துள்ளது. அதாவது,தனது அனைத்து வரி வருவாயையும்,உக்ரைன் இராணுவத்துக்காகச் செலவு செய்கிறது.
கடந்த ஆண்டு, இராணுவத்துக்காகச் சீனா 31,400 கோடி அமெரிக்க டாலர் செலவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 7 சதவீதம் அதிகமாகும். கடந்த 30 ஆண்டுகளாகச் சீனாவின் இராணுவத் செலவினம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியா,ஜப்பான்,தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த இராணுவ செலவுகளை விடச் சீனாவின் இராணுவச் செலவு அதிகமாகும். அதன்படி, ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளின் இராணுவச் செலவுகளில், சீனாவின் பங்கு 50 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பத்தாண்டுகளில், சீனாவின் ராணுவச் செலவு 59 சதவீதம் அதிகரித்துள்ளது. 2035ம் ஆண்டுக்குள் அனைத்து தளங்களிலும் தனது ராணுவத்தை நவீனமயமாக்கும் முயற்சியில், சீனா அதிக அளவில் இராணுவத்துக்கு முதலீடு செய்து வருகிறது.
கடந்த ஆண்டு, புதிய ஸ்டெல்த் போர் விமானங்கள், ஆளில்லா UAV-கள் மற்றும் ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்கள், தனித்தனியாக விண்வெளி மற்றும் சைபர் இராணுவப் படைகள் மட்டுமில்லாமல்,அணு ஆயுதங்களை விரிவுபடுத்துவதிலும் சீனா தனது இராணுவத்தைப் பலப் படுத்தி வருகிறது.
சீனாவின் இராணுவக் கட்டமைப்பு வளர்ச்சி என்பது பிற ஆசிய நாடுகளின் இராணுவக் கொள்கையும் மாறியுள்ளது. மேலும், தத்தம் இராணுவச் செலவினங்களைச் சீனா காரணமாகவே, அந்தந்த நாடுகள் அதிகரித்துள்ளன.
2024 ஆம் ஆண்டில், இந்தியா 8610 கோடி அமெரிக்க டாலரை இராணுவத்துக்காகச் செலவு செய்துள்ளது. இது பாகிஸ்தானை விட 9 மடங்கு அதிகமாகும். இதன்முலம், உலகளவில் இராணுவத்துறைக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளின் வரிசையில் ஐந்தாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு, பாகிஸ்தான் 1,020 கோடி அமெரிக்க டாலரை மட்டுமே செலவிட்டுள்ளது. இந்தியாவின் மொத்த இராணுவச் செலவில் வெறும் 12 சதவீதத்தை மட்டுமே இராணுவத்துக்காக பாகிஸ்தான் செலவு செய்கிறது. உலக அளவில் இராணுவச் செலவு பட்டியலில் பாகிஸ்தான் 29 வது இடத்தில் உள்ளது.
2015 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் இராணுவச் செலவு 42 சதவீதம் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள இந்த அறிக்கை, சமீப ஆண்டுகளாக இந்தியா ஆயுத இறக்குமதியைக் குறைத்து வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளது.
குறிப்பாக, மூலதனச் செலவினங்களில் 75 சதவீதத்தை, அதாவது, மொத்த இராணுவச் செலவினத்தில் 22 சதவீதத்தை, உள்நாட்டு இராணுவ கொள்முதலுக்கு இந்தியா செலவழிக்கிறது. இந்தியா உள்நாட்டிலேயே கவச வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை உற்பத்தி செய்து வருகிறது.
மேலும், ஆயுதப் படைகளின் சம்பளம், இராணுவ துறையின் அன்றாட செலவுகள், மற்றும் 3.4 மில்லியன் முன்னாள் இராணுவ வீரர்களின் ஓய்வூதியங்களுக்காக மீதமுள்ள பணம் செலவழிக்கப் படுகிறது.
சீனா மற்றும் பாகிஸ்தான் அச்சுறுத்தலைச் சமாளிக்க 2.5 சதவீதம் தேவைப்படும் நிலையில், நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 1.9 சதவீதத்தை மட்டுமே இராணுவத்துக்காக இந்தியா செலவு செய்கிறது.
புவிசார் அரசியல், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ராணுவத் திறன்களை மேம்படுத்தவும் நீண்ட கால திட்டத்துடன் இந்தியா இராணுவத்துக்கு இன்னும் அதிகளவில் செலவழிக்க வேண்டும் என்று ராணுவத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.