புதிய அட்டவணைப்படி கூடுதல் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவை, மே 2-ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு வசதியான பயண அனுபவத்தை வழக்கும் வகையில், சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவை கடந்த 19-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
ஞாயிற்று கிழமைகளை தவிர்த்து மற்ற தினங்களில் இந்த சேவை இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தெற்கு ரயில்வே சார்பில் இந்த சேவை தொடர்பாக பொதுமக்களிடம் கடந்த 24-ம் தேதி வரை வாட்ஸ் ஆப் மூலம் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
அதில் அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வசதிக்கேற்ப காலை மற்றும் மாலை நேரங்களில், கூடுதல் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவையை இயக்குமாறு பலரும் கோரிக்கை முன்வைத்ததாக கூறப்படுகிறது.
அதனடிப்படையில் திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணை தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டது. புதிய அட்டவணைப்படி கூடுதல் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவை, மே 2-ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.