அடுத்த 24-36 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்க உள்ளதாக அந்நாட்டு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், அடுத்த 24-36 மணி நேரத்திற்குள் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக நம்பகமான உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இந்தியாவின் வேதனையின் வலியை உண்மையிலேயே புரிந்துகொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். தீவிரவாத சம்பவத்தை பாகிஸ்தான் எப்போதும கண்டித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக நடுநிலை நிபுணர்கள் குழுவால் நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுயாதீனமான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இந்தியா ஆபத்தான பாதையில் செல்வதாகவும், அது முழு பிராந்தியத்திற்கும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.