மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகே, ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஃபால்பட்டி மச்சுவா பகுதியில் உள்ள ஹோட்டலில் இரவு, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 5வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
சிலர் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஹோட்டலில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து, கொல்கத்தா காவல் ஆணையர் மனோஜ் குமார் வர்மா சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து ஆராய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தீ தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை சீரிய முறையில் கண்காணிக்க வேண்டும் என மாநில அரசுக்கு மத்திய அமைச்சரும், மேற்குவங்க பாஜக தலைவருமான சுகந்தா மஜும்தார் வலியுறுத்தியுள்ளார்.