மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முதல் நாளில், சிம்ம வாகனம் மற்றும் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி – சுந்தரேஸ்வரரைப் பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர்.
உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முதல் நாளில் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மனும், கற்பக விருட்ச வாகனத்தில் சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகள் வழியாக உலா வந்தனர்.
அப்போது அங்குத் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியையும் அம்மனையும் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வீதியுலாவின் முகப்பில் ஏராளமான சிறுவர், சிறுமிகள் சிவ பெருமான், முருகர், விநாயகர் மற்றும் மீனாட்சியம்மன் வேடமணிந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாகச் சென்றனர்.