அரசியலில் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு, கண்டிப்பும், சுய கட்டுப்பாடும் முக்கியம் என தவெக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கோவையில் நடந்த வாக்குச்சாவடி முகவர்களின் கூட்டத்திற்கு வந்தபோது தொண்டர்கள் தன்னை அன்பால் நனைய வைத்ததாகவும், தன்னுடைய தொண்டர்களுக்கு சில அன்பு கட்டளைகளை வேண்டுகோளாக விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தவெக இளம் தோழர்கள் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசமின்றி வேகமாகப் பின்தொடர வேண்டாம் என்றும், பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது கவலையை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தவெக தொண்டர்கள் அன்பை வெளிப்படுத்தும் விதம் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள விஜய், எல்லாவற்றுக்கும் மேலாகத் தொண்டர்களின் பாதுகாப்புதான் தனக்கு முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், நமது அரசியலில் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு, கண்டிப்பும், சுய கட்டுப்பாடும் முக்கியம் என அறிவுறுத்தியுள்ள விஜய், இனி நடக்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தொண்டர்கள் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.