சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாமன்ற மாதாந்திர கூட்டத்தில், கட்டுமான பணிகள் தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில், வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத கட்டடங்களுக்கு 30 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆயிரம் சதுரமீட்டருக்கு அதிகமான பரப்பளவு உள்ள தளங்களில் வழிகாட்டுதல் விதிகளை மீறினால் 5 லட்சம் ரூபாயும், ஐநூறுக்கு மேல் 20 ஆயிரம் சதுர மீட்டர் வரை பரப்பளவு கொண்ட தளங்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
300 முதல் 500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள தளங்களில் வழிகாட்டு விதிமீறலுக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடுத்தர மற்றும் குறைந்த முக்கியத்துவம் கொண்ட வழிகாட்டுதல்களில் விதிமீறல்கள் ஏற்பட்டால் 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும் என்றும், தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடும் தளங்களின் கட்டுமான நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.