சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. வாகன நிறுத்துமிடங்களாகவும், சாலையோர வியாபார கடைகளாகவும் காட்சியளிக்கும் நடைபாதைகள் குறித்தும் அதனை மீட்க வேண்டிய அவசியம் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சென்னை மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக்கும் நோக்கத்தில் தி.நகர் பாண்டிபஜார் பகுதியில் அதற்கான முன்கட்ட பணிகள் தொடங்கின. மத்திய அரசின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு சுமார் 800 மீட்டர் நீளத்திற்குச் சாலையின் இருபுறமும் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பில் நடைபாதை கட்டி முடிக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டன.
பொது பாதைகள் எவ்வித சிரமுமின்றி நடக்கத் திறக்கப்பட்ட நடைபாதை தற்போது நடக்கவே முடியாத அளவிற்குக் காட்சியளிக்கின்றன. போக்குவரத்து நெரிசலின் போது பொதுமக்கள் நடப்பதற்காக அமைக்கப்பட்ட நடைபாதை தற்போது முழுவதும் வாகனங்கள் பார்க்கிங் செய்யும் பகுதியாகக் காட்சியளிக்கின்றன. நடைபாதை வாகன நிறுத்துமிடமாக மாறிவிட்டதால் பொதுமக்கள் சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கியுள்ளனர்.
வணிக நிறுவனங்கள் நிறைந்திருக்கும் சென்னை தி.நகர் போன்ற பகுதிகளில் வார இறுதி நாட்கள் மட்டுமல்லாது வார நாட்களிலும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவிலேயே இருக்கிறது. இப்படியான சூழலில் குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை பயன்படுத்தும் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
நடைபாதைகளை வாகனங்கள் மட்டுமல்ல சாலையோர வியாபாரக் கடைகளும் ஆக்கிரமித்திருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. சாலையோர வியாபாரங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் சென்னை மாநகராட்சி இப்பிரச்சனையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனப் பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதசாரிகளுக்குச் சிறந்த நடைபாதைகள் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துவரும் நிலையில், ஏற்கனவே அமைக்கப்பட்ட நடைபாதைகளும் ஆக்கிரமிப்புகளால் நிறைந்திருப்பது விபத்துகளுக்கும் அடிப்படை காரணமாக அமைந்திருக்கிறது. நடைபாதை நடப்பதற்கே என்ற பெயர்ப் பலகை வைப்பதோடு நிறுத்திவிடாமல் அதனைச் செயல்படுத்துவதிலும் மாநகராட்சி கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.