பகல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இச்சூழலில், இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் சுலபமாக நுழைவதற்கும், ராணுவத் துருப்புக்களை அனுப்புவதற்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே ஆழமான சுரங்கப்பாதைகள் நெட்வொர்க்கை பாகிஸ்தான் உருவாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
26 சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாகச் சுட்டுக் கொன்ற பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னதாக பாகிஸ்தான் ராணுவமும், உளவுத்துறையும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அதிகரிக்கும் முயற்சியில் ரகசியத் திட்டங்கள் தீட்டியது தெரியவந்துள்ளது.
கடந்த டிசம்பர் முதல் ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு அருகில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் வழியாக ஒவ்வொரு மாதமும் குறைந்தது 120 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி மூன்று வகையான தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
முதலாவது, வழக்கமான பயங்கரவாதிகள் நடத்தும் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள், இரண்டாவதாக, பாகிஸ்தான் ராணுவத்தின் எல்லை நடவடிக்கைக் குழுவின் பயங்கரவாத தாக்குதல்கள் மூன்றாவதாக, IED மூலம் குண்டுவெடிப்புகளை நடத்துவது என இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது என்று மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் எல்லை நடவடிக்கைக் குழுக்களில் 6 பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மற்றும் பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்கள் இந்திய வீரர்களைக் கொலை செய்ய இரவு முழுவதும் கொரில்லா தாக்குதல்களை நடத்துவார்கள். இந்த நடவடிக்கைக்குப் பிறகு, இந்த குழுக்கள் பாகிஸ்தான் ராணுவ நிலைகளுக்குத் திரும்பிவிடுவர்.
எல்லைப் பகுதி அருகே பாகிஸ்தான் அமைத்திருக்கும் பல்வேறு முகாம்களில், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அல்-பத்ர் அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளே 80 சதவீதம் பேர் உள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில், பள்ளத்தாக்கின் குரேஸ், உரி மற்றும் கெரான் பிரிவுகளிலிருந்து ஜம்முவில் உள்ள பிம்பர் கலி, பூஞ்ச், கிருஷ்ணா காட்டி மற்றும் சம்பா வரை, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுமார் 167 பேரும், இந்த ஆண்டு ஜனவரியில் 146 பேரும், பிப்ரவரியில் 138 பேரும், மார்ச் மாதத்தில் 122 பேரும் இந்தியாவுக்குள் ஊடுருவ, எல்லைக் கோட்டருகே காத்திருந்ததாக உளவுத்துறை குறிப்புகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு இதே மாதங்களில் ஊடுருவத் தயாராக இருந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை சராசரியாக 40 முதல் 50 ஆக இருந்ததாக மத்திய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் பக்கத்திலிருந்து ஆர்னியா பகுதிக்குள் வரும் நிலத்தடியில் பாகிஸ்தான் உருவாக்கி இருந்த ஆழமான குறுக்குவெட்டு சுரங்கப்பாதையை இந்திய பாதுகாப்புப் படையினர் 2017 ஆம் ஆண்டே கண்டுபிடித்தது.
தொடர்ந்து, 2020 ஆண்டில், ஜம்மு காஷ்மீர் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லையில் (IB) பாகிஸ்தான் பக்கத்திலிருந்து தோண்டப்பட்ட150 மீட்டர் நீளமுள்ள பெரிய சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்தனர். 2019 புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அசாரின் மருமகன் உமர் ஃபரூக், இந்தியாவுக்குள் நுழைய 2018ம் ஆண்டு, சம்பா செக்டாரில் ஒரு சுரங்கப்பாதையைத் தான் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
முன்னதாக, 2016ம் ஆண்டு நடந்த நக்ரோடா முகாம் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளும் இந்தியாவுக்குள் ஊடுருவ இந்தச் சுரங்கப்பாதையைப் பயன்படுத்தியதாகத் தெரியவந்துள்ளது.
500 மீட்டர் நீளம், 30 மீட்டர் ஆழம் கொண்ட இந்த இரகசிய சுரங்கப் பாதை, பாகிஸ்தானின் நிலப்பகுதியில் சுமார் 200 மீட்டர் வரை நீண்டுள்ளது. இந்தியாவுக்குள் ஊடுருவக் காத்திருக்கும் பயங்கர வாதிகள் சுவாசிப்பதற்காக ஆக்ஸிஜன் குழாய்களும் சுரங்கப் பாதைக்குள் அமைக்கப் பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டிலும், இந்திய எல்லையில் இருந்து, 900 மீட்டர் தொலைவில் உள்ள பாகிஸ்தான் சாமன் குர்த் சாவடிக்கு எதிரே, சர்வதேச எல்லையிலிருந்து 150 மீட்டர் தொலைவிலும், எல்லை வேலியிலிருந்து 50 மீட்டர் தொலைவிலும் புதிதாகத் தோண்டப்பட்ட சுரங்கப்பாதையை இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.
எல்லை தாண்டிய சுரங்கப்பாதைகளைத் தோண்டுவதற்கான வசதிகளைப் பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தான் எல்லையோர ராணுவ வீரர்கள் செய்து கொடுக்கிறார்கள். மேலும், பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை மறைக்க, தங்கள் எல்லைப் பக்கத்தில் உயரமான யானைப் புல் நிறைந்த பகுதிகளை வேண்டுமென்றே அமைத்துக் கொள்கிறார்கள் என்று புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2001ம் ஆண்டு முதல், பயங்கரவாதிகளை அனுப்பப் பாகிஸ்தான் பயன்படுத்தும் சுமார் 22க்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகளை இந்தியா கண்டுபிடித்துத் தகர்த்துள்ளது. இன்னும் பல சுரங்கப்பாதைகள் இருக்கலாம் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையின் 33 கிலோமீட்டர் நீளமுள்ள பகுதியில், நிலத்தடி ஊடுருவலைத் தடுக்க 25 கிலோமீட்டர் நீளத்துக்குச் சுரங்கப்பாதை எதிர்ப்பு அகழிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழையச் சுரங்கப்பாதைகளைப் பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணித்துத் தடுக்க, எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.