பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே போர்ச்சூழலில் ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவுடனான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து ஆப்கானிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணுசக்தி நாடுகளுக்கு மத்தியில் உள்ள அட்டாரி எல்லை மூடப்பட்ட நிலையில், புவிசார் அரசியல் போட்டியில் ஆப்கானிஸ்தான் சிக்கியுள்ளது.
இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இடையே நீண்ட காலமாகவே மறைமுக எதிர்ப்பும் விரோதமும் இருந்து வந்தது. கார்கில் போரின் போது, தலிபான் எதிர்ப்புப் படைகளை இந்தியா ஆதரித்தது. 2016 ஆம் ஆண்டு, உரி தாக்குதலுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் உட்பட எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து இந்தியா உரக்க குரல் கொடுத்தது. 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத அமைப்புக்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் நோக்கில், ஆப்கானிஸ்தானுடன் உளவுத்துறை ஒத்துழைப்பை இந்தியா அதிகரித்துக் கொண்டது.
இந்தியாவுடனான உறவை மேம்படுத்தக் கிடைத்த நல்ல வாய்ப்பாக பகல்காம் தாக்குதலை தலிபான் அரசு பயன்படுத்திக் கொண்டது. பகல்காம் பயங்கர வாத தாக்குதலுக்கு உடனடியாக கடும் கண்டனம் தெரிவித்துள்ள தலிபான், இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள், பிராந்திய பாதுகாப்புக்கும் மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-ஈரான் பிரிவின் இணைச் செயலாளராக சமீபத்தில் பொறுப்பேற்ற ஆனந்த் பிரகாஷ், காபூலில் தலிபானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாகியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக் குறித்து, மத்திய அரசிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
இந்தியாவுடனான ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கான ஆப்கானிஸ்தானின் விருப்பத்தை வலியுறுத்தியுள்ள முட்டாகி, இந்திய முதலீட்டாளர்கள் ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகத் தாலிபானின் வெளியுறவு அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் ஹபீஸ் ஜியா அகமது தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மக்களின் நடமாட்டம் எளிதாக்கப்பட வேண்டும் என்றும், ஆப்கானிஸ்தான் நோயாளிகள், மாணவர்கள் மற்றும் வணிகர்களுக்கு விசா வழங்குவது போன்ற சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் முட்டாகி கூறியதாக ஹபீஸ் ஜியா அகமது கூறியுள்ளார்.
2021ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், தனது தூதரக அதிகாரிகளை இந்தியா உடனடியாக திரும்பப் பெற்றது. ஆனால் அடுத்த ஆண்டே, ஒரு தொழில்நுட்பக் குழுவை காபூலில் உள்ள தூதரகத்துக்கு அனுப்பி, தனது ராஜதந்திர இருப்பைத் தக்க வைத்துக் கொண்டது இந்தியா. எனினும் ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆட்சியை இந்தியா இன்னும் அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசு அமைய விருப்பம் தெரிவித்துள்ள இந்தியா, எந்த நாட்டுக்கும் எதிரான எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும், மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க ஆப்கானிஸ்தானுக்குத் தடையற்ற மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் இந்தியா உறுதியளித்துள்ளது.
பகல்காம் பயங்கர தாக்குதலுக்குப் பின், இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஒரே நில எல்லையான அட்டாரியை இந்தியா மூடியது. இந்நிலையில், கராச்சி மற்றும் குவாதரில் உள்ள பாகிஸ்தான் துறைமுகங்களைத் தவிர்த்து, இந்தியா பெருமளவில் முதலீடு செய்துள்ள ஈரானின் சபாகர் துறைமுகம் மூலம் வர்த்தகத்தை விரிவுபடுத்துவது குறித்தும் தலிபான் அரசு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே தாலிபன் எதிர்ப்பு சக்திகளுக்கு ISI வழங்கும் ரகசிய ஆதரவு, ஆப்கானில் தாலிபான் அரசுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. மேலும், பாகிஸ்தானில் உள்ள மில்லியன் கணக்கான ஆப்கான் அகதிகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது. இந்தச் சூழலில் டெல்லியும் காபூலும் புது நம்பிக்கைக்குரிய உறவை வளர்க்க முயற்சிக்கின்றன.