முதலமைச்சராக குஜராத்தை சிறப்பாக வழிநடத்திய பிரதமர் மோடி தற்போது இந்தியாவையும் சிறப்பாக வழிநடத்தி வருகிறார் என ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் அருங்காட்சியக அரங்கில் குஜராத் மாநில உதய தினம் கொண்டாடப்பட்டது. குஜராத் சமாஜ் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிகப்படியான சுதந்திர போராட்ட தியாகிகள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளை கொண்ட மாநிலமான குஜராத், நாட்டில் ஒரு சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
குஜராத்தில் பூகம்பம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் வந்தபோது அவற்றையெல்லாம் சமாளித்து ஒரு முதலமைச்சராக, அம்மாநிலத்தை சிறப்பாக வழிநடத்திய பிரதமர் மோடி தற்போது இந்தியாவையும் அவ்வாறே வழிநடத்தி வருவதாக புகழாரம் சூட்டினார்.
2014-ல் 11-ம் இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் தற்போது 5-ம் இடத்திற்கு முன்னேறி இருப்பதற்கு பிரதமரே காரணம் எனவும், இன்னும் சில ஆண்டுகளில் நாம் 3-ம் இடத்திற்கு முன்னேறுவது உறுதி என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.